“என்னப்பா, இப்படி கன்னம் ரெண்டும் குழி விழுந்து போயி, ஏம்ப்பா சோறு…கீறு ஒழுங்கா சாப்பிடுறாயா இல்லையா?” -ஊரில் இருந்து வீடு வந்திறங்கிய மகனிடம் அம்மா.
“கொழந்த நல்லா புஷ்டியா கொழு கொழுன்னு வளர்ந்துருக்கு” – வீடியோ தொலைபேசி அழைப்பினில் பாட்டி பேரக் குழந்தையை கண்டு பூரிப்பு.
“இது சாதாரண தொப்பை இல்லைடா, பணத் தொப்பை” – BMW வாங்கிய நண்பருக்கு பாராட்டு பார்ட்டியில் நண்பர் பட்டாளம், வயிற்றினில் தட்டி வியப்பு.
இப்படி மக்கள் பேசக் கேட்டிருப்பீங்க. ஆனா உண்மையில இவை யாவும் உடல் பருமனை பாராட்டி சீராட்டி பேசி வருகிற மனப்பான்மையே ஆகும்.
இது நல்லதல்ல!
உலகில் 200 கோடி பேரு அளவுக்கு கண்டமேனிக்கு தின்னு கொழுத்து போயி குண்டா இருக்காங்கன்னு அதிகாரபூர்வ அறிக்கைகள் சொல்லுது.
மத்திய வளைகுடா நாடுகளில் மட்டும் 48% பேரு ஓவர் குண்டு. பசிபிக் தீவு பிரதேசங்களில் 34% மற்றும் அமெரிக்காவில் மட்டும் 33% மக்கள் குண்டா இருக்காங்கன்னு ஐநா ஆய்வு அறிக்கை ஒரு பெரிய குண்ட தூக்கி போட்டுருக்கு.
இதற்கு காரணம் நாம சாப்பிடும் உணவு பழக்க வழக்கம், போதிய உடற்பயிற்சி இல்லாதது மற்றும் ஒருவர் வாழ்வில் தம்மை சுற்றி அமைந்த சுற்றுச்சூழல் எல்லாம் ஒரு காரணமாகிறது என நிபுணர்கள் கூறுகிறார்கள்.
CNN செய்தி நிறுவனம் அளித்த குறிப்பு ஒன்றினில், பெருவாரியான மக்கள் பணி நிமித்தம், நகரங்களை நோக்கி பயணப்படுவதாலும், அங்கு ‘வேலை-வீடு-வேலையோ வேலை-வீடு’ என வாழ்வில் பெருவாரியான பொழுதினை ஒரு நாற்காலியில் அமர்ந்தே (பல்லை குத்திட்டு) செலவிட்டு வருவதனால் உடற்பயிற்சிக்கான நேரம் கிடைப்பதில்லை. பலன்: உடல் எடை, ‘புஸ்ஸ்ஸ்னு’ ஏறி விடுகிறது.
உங்க எல்லோருக்குமே தெரியும். இன்போசிஸ் முதலாளி சும்மா இருக்காம, இந்தியாவில் இனி இளைய சமூகம் வாரம்தோறும் (குறைந்தபட்சமாக) சுமார் 70 மணி நேரம் வேலைசெய்யனும், அப்பதான் நாம நாட்டை ஒரு மிகப்பெரிய பொருளாதார வல்லரசு ஆக்க முடியும்னு ஒரே போடா போட்டுட்டாரு.
ஒரு பய கூட இதுக்கு ‘ஓகே’ சொல்லல. சமூக வலைத்தளங்களில் அவரை கண்டமேனிக்கு திட்டி விட்டுட்டாங்க. “என்ன மனுஷன்யா இந்த ஆளு! சும்மா இருக்குற சங்கை ஊதிக் கெடுக்கறது மாதிரி, நமக்கு நல்லா ஆப்பு வைக்க பாக்கறாரு” -ன்னு ஏசினாங்க, பேசினாங்க. நன்கு அறிவோம்.
இங்கேயாவது பரவாயில்லை. வளைகுடா நாடுகளில் உடல் எடை கூடிப் போயி அவஸ்தை படுவது அதிக பேர் பெண்களாம். காரணம் அங்கே கலாச்சார இடையூறு ஒரு முக்கிய காரணமாம்.
அவர்கள் பின்பற்றும் மதம் அவர்களை பொதுவெளியில் நடைப் பயிற்சி மேற்கொள்ளவோ, உடற்பயிற்சி செய்யவோ அனுமதிப்பது கிடையாதாம். ஆண்கள் பார்வையில் பெண்கள் படுவதை அவர் மதம் ஒருபோதும் அனுமதிப்பது கிடையாதாம்.
நமது நாட்டினில் பிரச்சனை வேறு.
இங்க பசங்கள நாம பாடங்களை படிப்பதில் தான் கவனம் செலுத்தக் கூறி வருகிறோம்.
கணக்கு பாடத்தில் இம்முறை 100/100 எடுக்க வேண்டும், கணக்கு, இயற்பியல், வேதியல் இம் மூன்றும் தான் உன்னை நாளை ஒரு பொறியியல் வல்லுநர் ஆக்க வல்லது.
இல்லனா, “உயிரியல் படித்து நீட் தேர்வினில் வென்று என் பிள்ளை நாளைக்கு மருத்துவர் ஆகணும் அதுவே எங்கள் கனவுத் திட்டம்” -னு புள்ளைங்கள பெற்றோர் கூட்டிட்டு போயி நாமக்கல் கோழிப் பண்ணை ஒன்றினில் அடைத்து விட்டு வீடு திரும்பி விடுகிறார்கள்.
புள்ள டாக்டர் ஆகுறானோ இல்லையோ, 200 கிலோ எடையில் ஏறி விடுகிறான்.
பயிற்சி நிலையங்களில் பல உடற்பயிற்சியின் முக்கியத்துவத்தை சொல்லிக் கொடுப்பது கிடையாது. “படி, படி, படி மேலும் படி”-ன்னு பசங்கள சும்மா 18 – 20 மணி நேரமா தூங்க விடாம படிக்க வைக்கிறாங்க பாவம்.
இது போதாதுன்னு, வீட்டுக்கு வரும் மகன் மகளுக்கு வாய்க்கு ருசியா ‘fast-food’ எனும் துரித உணவு பதார்த்தங்களை பெற்றோர் வாங்கி தந்து ஊக்குவிக்கின்றனர். அதுவும் உடல் பருமனை கூட்டி விடும் என்பது பலருக்கு தெரிவதில்லை.
துரித உணவு பிளஸ் இனிப்பு நிறைந்த Coke, Pepsi or Sprite எனும் குளிர்பான வகைகள் தான் இன்றைய இளைய சமூகத்தினரின் மிகப் பெரிய வில்லன்.
உடல் பருமன் இப்போதெல்லாம் ஒரு தனி மனித பிரச்சினை அல்லாது, ஒரு குடும்பமே மொத்தமாக சேர்ந்து புள்ளைங்கள கெட்ட பசங்களாக மாற்றி வைக்கும் ஒரு வாடிக்கை இங்கே புழக்கத்தில் இருக்கிறது, என மேலும் அந்த CNN செய்தி குறிப்பு கூறுகிறது.
பொய்யின்னா, வாங்க ஐநா அறிக்கை என்ன சொல்லிருக்குன்னு, நீங்களே பாருங்களேன், தெரியும்.
அஞ்சு வயசுக்கு கீழ உள்ள சின்ன பசங்க 1990 ஆம் ஆண்டினில் வெறும் 3 கோடியா இருந்தாங்களாம், இன்னைக்கு அதுவே 2013 ஆம் ஆண்டினில் 4 கோடிக்கு மேல எகிருடிச்சாம். எப்படி இருக்கு?
ஆப்பிரிக்க நாடுகளில், இது இன்னும் மோசம்னு ஐநா மிகவும் கவலைப்படுகிறது.
வாயக் கட்டி வயித்த கட்டி, ஒரு வேலை சாப்பாடு மட்டுமே சாப்பிடுப்பான்னு சொல்லி உணவினை ஒரு கட்டுக்கோப்பினிற்கு கொண்டு வந்து, பசங்கள, “யப்பா! நீ படிச்சது போதும், செத்த நேரம் அப்படியே வெளில போயி விளையாடிட்டு வாப்பா!
கராட்டே, கன்பூ -ன்னு போயி கொஞ்சம் கையை கால ஆட்டிட்டு வாப்பா!” -ன்னு பயிற்சி வகுப்புகளுக்கு அனுப்பி, அவஙகள இப்பவே ஒரு தட்டு தட்டி, சுளுக்கு-நெளிவு எடுத்தாதான் இந்த வெயிட் பிரச்சினை சரியாகும்.
செய்வோமா? சொல்லுங்க கோடானு கோடி எமது பெற்றோர்களே!