What activities do you lose yourself in?
I read about Banksy, his mystery art, J.D. Salinger’s The Catcher in the Rye, Friedrich Nietzsche (Thus Spake Zarathustra) and How Bizarre by OMC. I’m lost.
Sorry, did you ask something?
"சென்றிடுவீர் எட்டுத் திக்கும்"
World is a Global Village.
What activities do you lose yourself in?
I read about Banksy, his mystery art, J.D. Salinger’s The Catcher in the Rye, Friedrich Nietzsche (Thus Spake Zarathustra) and How Bizarre by OMC. I’m lost.
Sorry, did you ask something?
அடுப்புச் சாப்பாடு
🍳🍳🍳🍳🍳🍳🍳
(இதை எழுதியவர் யாரென்று தெரியவில்லை – ஒவ்வொரு லைனிலும் பஞ்ச் இருக்கிறது – 1980களில் பல வீடுகளில் இதே நிலை தான்)
“விறகு மண்டிக்குப் போய் விறகு வாங்கிட்டு வரனும்” என்பார் அம்மா.
அப்பா விறகு மண்டிக்கு கிளம்புவார். பின்னாலேயே நானும் அண்ணன்களும் போக வேண்டும். நாங்கள் தான் டெலிவரி செய்யும் மகன்கள். அமேசன்கள்.
விறகு மண்டியில் பெரிய பெரிய மரங்கள் அடுக்கி வைக்கப்பட்டிருக்கும். ஆயிரத்தில் ஒருவன் எம்.ஜி.ஆர் மாதிரி ஒரு ஆள் எப்போது பார்த்தாலும் கோடாலி வைத்து விறகுகளை பிளந்து கொண்டே இருப்பார். ஏன் என்ற கேள்வி ஒரு தடவை கூட அவர் கேட்டதில்லை.
“ரெண்டு குண்டு விறகு வைங்க” என்பார் அப்பா.
குண்டு என்பது ஒரு எடை அளவு. கடைக்காரரும் விறகை எடுத்து தராசில் வைப்பார்.
நான் அந்த goondas act ஐ வேடிக்கை பார்த்துக் கொண்டிருப்பேன்.
தராசு என்பது பெரிதாக இருக்கும். குருவாயூர் கோவிலில் துலாபாரம் போடும் தராசை விட பெரிதாக இருக்கும். Large scale தராசு. வலது பக்கம் விறகு கட்டைகளை வைக்க வைக்க அந்த தட்டு இந்திய ரூபாயின் மதிப்பு மாதிரி கீழே இறங்கும்.
“ஈர விறகு எல்லாம் வைக்காதீங்க…போன தடவையே எதுவும் சரியா எரியல்லே” என்பார் அப்பா. இது அவரின் சுய சிந்தனை இல்லை. மண்டபத்தில் யாரோ எழுதிக் கொடுத்ததை ஒப்பித்து கொண்டிருக்கிறார்.
“எடுத்துகிட்டு போய் கொஞ்சம் காய வைச்சா நல்லா எரியும்” என்பார் கடைக்காரர்.
‘காயமே இது பொய்யடா’ என்று தெரிந்தும் அந்த விறகை வாங்குவதை தவிர வேறு வழியில்லை. ஊரில் ஒரே ஒரு விறகு கடை தான் இருந்தது. வீரப்பன் வேறு அவரின் கம்பெனியை அப்போது incorporate செய்திருக்கவில்லை.
இப்போது ஈரம் விளைந்த விறகை வீட்டுக்கு எடுத்துப் போக வேண்டும்.
கருடாழ்வார் மாதிரி நம்முடைய இரண்டு கைகளையும் நீட்ட வேண்டும். அதன் மேல் விறகுகளை அடுக்கி வைப்பார்கள். விறகுக்கு கீழே கையில் ஒரு சாக்கு போட்டு விடுவார்கள். கையில் விறகு குத்தாமல் இருக்க அது ஒரு சாக்கு அப்ஸார்பர்.
நானும் அண்ணனும் தெருவில் பிரதர் வலம் வருவோம்.
கால் மணி நேரத்தில் விறகுகுண பாண்டியர்கள் வீடு போய் சேர்ந்து விடுவோம். இப்போது இன்ஸ்பெக்ஷன் நடக்கும். அம்மா ஒரு சரியான water diviner.
“இன்னும் விறகுல தண்ணி இருக்கே. ஒரே ஈரம்” என்பார்.
அம்மாவும் பாவம் தான். அந்த விறகை வைத்து எப்படி சமைப்பார்கள்?
விறகு காய வைக்கும் படலம் ஆரம்பிக்கும். மொட்டை மாடியில் விறகு காயப் போட வேண்டும். அதற்கும் நாங்கள் தான் packers and movers. நல்ல வேளை. காவல் காக்க வேண்டாம். காக்கா தூக்கிப் போகாது.
அப்போதெல்லாம் விறகு அடுப்பு விநோதமாக இருக்கும். சாணி பூசி மொழுகி சாணி ராணியாக இருக்கும். மேலே வீபூதி பட்டை வேறு இருக்கும். மண் அல்லது சிமெண்டினால் செய்திருப்பார்கள். அடுப்பின் மேல் மூன்று இடங்களில் உருண்டையாக புடைத்துக் கொண்டிருக்கும்.
இந்த மெயின் அடுப்புக்கு பக்கத்தில் அல்லக்கை மாதிரி இன்னொரு அடுப்பு இருக்கும். வட்டமாக ஒரு துவாரம் இருக்கும். மெயின் அடுப்பிலிருந்து சூடு இந்த அடுப்புக்கு இலவசமாக வரும். இந்த அடுப்பிற்கு கொடி அடுப்பு என்று பெயர்.
இந்த auxiliary அடுப்பு பொதுவாக ரசம் செய்யத் தான் உபயோகப்படுத்தப் படும்.
சமைக்கும் போது சதா சர்வகாலமும் அடுப்பு பக்கத்திலேயே ஜெகன் மோகினி பேய் மாதிரி இருக்க வேண்டும். விறகை உள்ளே தள்ளி விட்டுக் கொண்டே இருக்க வேண்டும்.
அவ்வப்போது விறகு அனைந்து புகை மூட்டம் வரும்.
சச்சீன் படத்தில் ஜெனிலியா வரும் போதெல்லாம் திரை முழுக்க புகை வருமே அந்த மாதிரி கிச்சன் முழுக்க புகை வியாபிக்கும். இப்போது விறகை ஊதுகுழல் வைத்து ஊத வேண்டும்.
“டேய். வந்து கொஞ்சம் அடுப்பை ஊதுடா?’ என்பாள் அம்மா.
அண்ணன் போய் ஊதுவான்.
“இன்னும் கொஞ்சம் காசு போட்டு நல்ல விறகா வாங்கியிருக்கக் கூடாதா? சரியான கஞ்சம்” என்று அம்மா புலம்புவாள்.
குழல் ஊதும் அண்ணனுக்கு பஞ்சப் பாட்டு சத்தம் கேட்டுக் கொண்டிருக்கும்.
குழல் ஊதுவதும் ஒரு டெக்னிக். கொஞ்சம் வேகமாக ஊதி விட்டால் ஆஷ் துரை கிச்சன் முழுக்க பறக்க ஆரம்பித்து விடுவார். வீடு முழுக்க சாம்பல் பள்ளத்தாக்கு ஆகிவிடும்.
விறகிலிருந்து வரும் புகையெல்லாம் சுவற்றில் fixed deposit ஆகும். கிச்சன் சுவர் முழுக்க கறுப்பாக இருக்கும். அந்த கருப்பை எல்லாம் எடுத்தால் Go back daddy என்று நூறு தடவை கறுப்பு கொடி காட்டலாம்.
அப்போதெல்லாம் குண்டு பல்பு தான். நாற்பது வாட்ஸ் பல்பு எரியும். அந்த வெளிச்சம் கரப்பான் பூச்சிகளுக்கே சரியாகப் போய் விடும்.
விறகு அடுப்பில் இன்னொரு பிரச்சினை. வெங்கலப் பானை அடியெல்லாம் கருப்பாகி விடும். அம்மா ராத்திரி உட்கார்ந்து தேய்த்துக் கொண்டிருப்பாள். அது ஒரு பெரிய night mare. அந்த காலத்தில் பிக் பாஸ் vessel cleaning team எல்லாம் கிடையாது. மும்தாஜும் சென்றாயனும் வந்து பாத்திரம் தேய்த்து கொடுக்க மாட்டார்கள்.
பாத்திரத்தில் கரி பிடிப்பதை தடுக்க ஒரு உபாயம் உண்டு. வெங்கலப் பானையின் அடியில் அரிசி மாவைக் கரைத்து பூசி விடுவாள் அம்மா. அந்தக்காலத்திலேயே Firewall கண்டு பிடித்திருந்தாள் அம்மா.
சாதம் பொங்கி வரும் போது கஞ்சி overflow ஆகும். அதை அப்படியே விட்டால் அடுப்பு அணைந்து விடும். கஞ்சிக்கு ஏது கண்ட்ரோல் வால்வ்? ஒரே வழி. விறகை பிடித்து வெளியே இழுக்க வேண்டியது தான்.
சமையல் முடிந்து விட்டால் அடுப்பை அணைக்க வேண்டும்.
அதுவும் ஒரு டெக்னிக் தான்.
விறகை வெளியே இழுக்க வேண்டும். அதன் மீது லேசாக தண்ணீரை தெளிக்க வேண்டும்.
‘தண்ணீர் தெளித்து விட்டாச்சு’ என்றால் இனிமேல் பயன் இல்லை என்று அர்த்தம். ஆனால் இந்த விறகில் தண்ணீர் தெளிப்பதே மறுபடியும் உபயோகப்படுத்தத்தான்.
சூடு ஆறிய பிறகு சாம்பலை சேகரிப்பாள் அம்மா. பாத்திரம் தேய்க்க அது தான். அம்மாவின் விம் பார்.
கிச்சனை விட்டு அம்மா வெளியே வரும் போது தலையெல்லாம் சாம்பல் துகள்கள் இருக்கும். கண்கள் சிவப்பாக கன்றிப் போயிருக்கும்.
ஆனால் தட்டில் வெள்ளை வேளேர் என சாதமும் சாம்பாரும் வந்து விழும்.
பல ஆண்டுகளுக்கு பிறகு இன்று என் வீட்டில் இருக்கும் கிச்சனைப் பார்க்கிறேன்.
மேடையில் இருக்கும் kitchen accessories ஐ நோட்டம் விடுகிறேன்.
கேஸ் ஸ்டவ் – piped gas உடன், மைக்ரோவேவ் ஓவன், ரைஸ் குக்கர், இண்டக்ஷன் ஸ்டவ், காபி மேக்கர், சப்பாத்தி மேக்கர், ப்ரெட் டோஸ்டர், சாண்ட்விச் மேக்கர், எலெக்ட்ரிக் கெட்டில்.
இவ்வளவு சாதனங்கள் இருக்கின்றன. வேண்டிய அளவு ப்ளக் பாயிண்ட் இல்லை. இருக்கும் ஒன்றிரண்டு ப்ளக் பாயிண்டிலும் செல்போன் சார்ஜர் நிரந்தரமாக குடியேறியேறியிருக்கிறது.
ஏனோ எனக்கு அம்மாவின் நினைவு வருகிறது. விறகு அடுப்பு வைத்து புகைகளுக்கு மத்தியில் பத்து பேருக்கு தவல வடை செய்து போட்டது ஞாபகம் வருகிறது.
இதோ இப்போதும் கிச்சனிலிருந்து குரல் கேட்கிறது.
“நைட் டிபனுக்கு என்ன செய்யட்டும்?”
ஒரே ஒரு வித்தியாசம்.
கேட்டது சமையல்காரம்மா.
யாரோ சுஜாதாவிடம் கடன்வாங்கிய எழுத்துக்களில் பதிவிட்டுள்ளார்கள்!!!!👌👌👌
எழுத்தாளர் யார் என்று தெரியவில்லை என அப்படியே கதையை முடித்து விடுவது சரியல்ல.
அவரே “நான்தான்” என்று சொல்லிவிடுவது நல்லது. இல்லையென்றால் துரத்தி துரத்தி தேடி தேடி கண்டுபுடிக்கப்படுவார்.
அப்படி ஒரு பாதிப்பினை ஏற்படுத்திவிட்டு எங்கும் ஓடி ஒளிந்துவிடுவது சுலபமல்ல, ஆம்! 🙄